அடையாறு; பருவ மழைக் காலங்களில், வேகமாக பரவும் நோய் பாதிப்புகளை தடுக்க, மாநகராட்சி சார்பில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பருவ மழையின்போது, மழை நீருடன் கழிவு நீர் கலப்பதால், தொற்று நோய் வேகமாக பரவும். புயலை தொடர்ந்து பெய்த மழையின்போது, சென்னையில் பல்வேறு பகுதியில், கழிவு நீர் பிரச்னை அதிகரித்தது. இதனால், ஏற்படும் நோய் பாதிப்புகளை தடுத்து, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என, மாநகராட்சி வலியுறுத்தி வருகிறது.இதற்காக, சுகாதாரத் துறை சார்பில், வீதிதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.அதில், மழை, குளிரின் போது கடைப்பிடிக்க வேண்டியவை, கழிவு நீரால் ஏற்படும் பாதிப்புகள், கழிவு நீர் கலந்த குடிநீரை தவிர்ப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குறித்தும், பயனற்ற பொருட்களில் மழைநீர் தேங்கவிடாமல், வீட்டை சுற்றி சுத்தமாக வைத்திருப்பது குறித்த விழிப்புணர்வு பிரசுரம், பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.