வேளச்சேரி; நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, வேளச்சேரியில், 10 நாட்களாக ஏற்பட்ட கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது.சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 177 மற்றும் 178வது வார்டு எல்லையில், வெங்கடேஸ்வரா நகர், பவானி நகர் உள்ளது. இங்கு, 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. பத்து நாட்களாக கழிவுநீர் வெளியேறி, தெருக்களில் தேங்கியது. குடிநீரில் கழிவுநீர் கலந்தது. கழிப்பறை நிரம்பி, வீட்டுக்குள் தேங்கியது. இரு முதியவர்கள், வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர்.பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய குடிநீர் வாரிய அதிகாரிகள், வார்டு எல்லையை காரணம் காட்டி, பகுதி மக்களை அலைக்கழித்தனர்.இது குறித்து, நம் நாளிதழில், நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, தெருவில் தேங்கிய கழிவுநீர், உறிஞ்சு லாரி கொண்டு அகற்றப்பட்டது. மேலும், அடைப்பு பகுதிகளை கண்டறிந்து, சரி செய்யும் பணி நடக்கிறது.