கொரட்டூர்; தொடர்மழையால், கொரட்டூர் ஏரி நிரம்பி, அதில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. ஏரிக்குள் கழிவுநீர் கலப்பதால், உபரிநீர் வெளியேறிய பின் சேகரமாகியுள்ள நீரில், பெரும்பகுதி கழிவாகவே இருக்கும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள, சென்னை, கொரட்டூர் ஏரிக்கான மழைநீர் வரத்து கால்வாய்கள், தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கி, மாயமாகி விட்டன. இதனால், அந்த ஏரிக்கு, மழை மற்றும் அம்பத்துார் ஏரி உபரிநீரால் மட்டும், நீர்வரத்து கிடைக்கும் நிலை உள்ளது.இஇஅம்பத்துார் கருக்கு, டி.டி.பி., காலனி அருகே உள்ள, கொரட்டூர் ஏரிக்கான பிரதான மழைநீர் வடிகால், அம்பத்துார் சுற்றுவட்டார தொழிற்சாலை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின், கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது.இதையடுத்து, கழிவுநீர் ஏரியில் கலப்பதை தடுக்க, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனால், ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, தீர்ப்பாயம் கடந்தாண்டு உத்தரவிட்டது.ஆனால், பலத்த மழையின் போது, டி.டி.பி., காலனி, வெள்ளத்தில் மூழ்குவதை தவிர்க்க, மாநகராட்சி அதிகாரிகள், தீர்ப்பாயத்தின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு, கரையை உடைத்து விடுவது வழக்கம். அப்போது, ஏரிக்குள் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து பாயும்.தீர்ப்பாய வழக்கு தொடர்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம், செப்டம்பரில், கொரட்டூர் ஏரி நீரின் தன்மை குறித்த, ஆய்வக அறிக்கையை, கோர்ட்டில் அளித்தது. அதில், குரோமியம், நிக்கல், ஜிங், ஈயம், இரும்பு ஆகிய நச்சுக்கழிவுகள் படிந்திருப்பது தெரியவந்தது.அதனால், கொரட்டூர் ஏரி நீர், குடிநீராக பயன்படுத்த முடியாத நிலையில் மாசடைந்துள்ளது. மேலும், அதில் குளிபோருக்கு, தோல் மற்றும் நுரையீரல் தொடர்பான, உடல் நல பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.இஇகொரட்டூர் ஏரியில் இருந்து, கலங்கல் வழியாக வெளியேறும் உபரிநீர், மாதவரம் ரெட்டேரியில் கலக்கிறது. அதனால், அந்த ஏரி நீரும் மாசடைந்து, சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் என்ற அச்சம், நீர்நிலை ஆர்வலர்களிடம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், புயல் மற்றும் பருவ மழையால், கொரட்டூர் ஏரிக்கு கிடைக்கும் மொத்த மழை நீரும், ஏரியில் இருந்து உபரியாக வெளியேறுவதால், அங்கு, கழிவுநீர் மட்டுமே சேமிப்பாக இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர் கூறியதாவது:பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் திட்டம், கழிவுநீரகற்று நிலையம், ஆக்கிரமிப்புகள் அகற்றம் என, அரசு துறைகளின் ஒருங்கிணைந்த பணியால் மட்டுமே, கொரட்டூர் ஏரியை, குடிநீர் ஏரியாக மீட்க முடியும். அதற்கு தேவையான நிதியை, அரசு ஒதுக்கினால் மட்டும், ஏரியை மீட்கும் பணி சாத்தியமாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.