தி.நகர்; தி.நகரில், நடைபாதையை ஆக்கிரமித்துள்ள டீக்கடையால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.கோடம்பாக்கம் மண்டலம், 136வது வார்டு, தி.நகர், டாக்டர் நாயர் சாலை மற்றும் விஜயராகவா சாலை உள்ளது. இந்த இருசாலைகள் சந்திப்பில், டீக்கடை அமைந்துள்ளது.இந்த கடை, நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடையின் மேற்கூரையில், சட்டவிரோதமாக, பெரிய விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், விளம்பர பலகைகள் வைக்க அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இரு சாலை சந்திப்பில் கடை இருப்பதால், டீ குடிக்க வரும் நபர்கள், சாலையோரம் தங்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நடக்கின்றன.மேலும், இந்த கடைகளில், அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனால், சமீபத்தில், கடையின் பின்புறம் உள்ள மரம் தீப்பிடித்து கருகிய நிலையில் உள்ளது. இப்பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாகவும் கூறப்படுகிறது.இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.