புதுச்சேரி : சொந்த உபயோகத்திற்கான வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்த ஆணையர் சிவக்குமார் எச்சரித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சொந்த உபயோகத்திற்கென பதிவு செய்துவிட்டு, வாடகை வாகனங்களாக இயக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை பல முறை எச்சரித்தும், சொந்த வாகனங்கள், போக்குவரத்து வாகனமாக பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.சொந்த உபயோகத்திற்கென பதிவு செய்யப்பட்ட வாகனங்களை உரிய அனுமதி இன்றி வாடகை வாகனமாக பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மீறினால், சம்மந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் மீது மோட்டார் வாகனச் சட்டம் 192-A பிரிவின்படி முதல் முறை குற்றத்திற்கு ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது மற்றும் அதற்கு மேலான குற்றத்திற்கு 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது,