சென்னை : கோயம்பேடு மார்க்கெட்டில், கரும்பு விற்பனை கடந்த நாட்களில் மந்தமாக நடந்தது. வரும் நாட்களில், கரும்பு விற்பனை அதிகரிக்கும் என, வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்
.சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மதுரை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பொங்கல் பண்டிகை நேரத்தில் செங்கரும்பு விற்பனைக்கு வருகிறது.அந்த வகையில், இந்தாண்டு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே, கோயம்பேட்டிற்கு கரும்பு வரத்து துவங்கிவிட்டது. நேற்று மட்டும், 100க்கும் மேற்பட்ட லாரிகளில், கரும்பு வரத்து இருந்தது.
மொத்த விலையில், 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, 250 முதல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு விற்பனை மந்தமாக நடக்கிறது.இதனால், வெளியூர்களில் இருந்து கரும்பு எடுத்துவந்துள்ள வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விற்பனை இன்று முதல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.