கரூர்: கிராம பஞ்சாயத்து செயலாளர்களையும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, இடமாற்றம் செய்ய வேண்டும் என, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பஞ்சாயத்து தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில், 2019 டிசம்பரில், ஊரக பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. 2020 ஜன.,6ல் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்பேற்று கொண்டனர். அதில், கிராம பஞ்சாயத்துகளின் நிர்வாகத்தை, 2016 அக்டோபர் முதல் ஐந்தாண்டுகள், தலைவர்கள் பொறுப்பில் இல்லாதபோது, செயலாளர்கள் கவனித்து வந்தனர். மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் மற்றும் டவுன் பஞ்சாயத்து செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றனர். ஆனால், ஒரே கிராம பஞ்சாயத்தில், செயலாளர் பல ஆண்டுகளாக பொறுப்பில் இருப்பது வழக்கம். பஞ்சாயத்து தலைவர்களுக்கு இணையாக, செயலாளர்களின் பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலம், புதிதாக பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வருகிறவர்களுக்கு, உள்ளாட்சி துறை சட்டத்திட்டங்கள் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை பயன்படுத்தி கொண்டு, பஞ்.,செயலாளர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், மூன்று ஆண்டுகளுக்கு, ஒருமுறை பஞ்.,செயலாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என, புதிய பஞ்., தலைவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.