கரூர்: கரூரில் மையப்பகுதியாக உள்ள சுங்ககேட், சர்ச் கார்னர், காமராஜ் மார்க்கெட், ஈரோடு சாலை உள்ளிட்ட பல இடங்களில் பஸ் நிறுத்தங்களில், சில ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டன. இதில், இரும்பாலான இருக்கைகளும் பொருத்தப்பட்டன. சுங்ககேட் பஸ் நிறுத்தத்தில், கலெக்டர் அலுவலகம், கோர்ட், தான் தோன்றிமலை கல்யாண வெங்கடரமண பெருமாள் கோவிலுக்கு செல்லும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருப்பர். மேலும், திருச்சியில் இருந்து வரும் பயணிகளும் வேறு பகுதிகளுக்கு செல்ல காத்திருப்பது வழக்கம். மேலும், காமராஜ் மார்க்கெட் அருகே அமைக்கப்பட்டுள்ள நிழற்கூடத்தில், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் மக்கள், வெளியூர் செல்ல பஸ்சுக்காக காத்திருப்பர். கரூர் சர்ச் கார்னர் பகுதியில், வெங்கமேடு, செம்மடை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, பயணிகள் காத்திருப்பர். இந்நிலையில், சுங்ககேட், சர்ச் கார்னர், காமராஜ் மார்கெட், ஈரோடு சாலை உள்ளிட்ட பல பஸ் நிறுத்த பயணிகள் நிழற்கூடத்தில், கடந்த சில மாதங்களாக இருக்கைகள் உடைந்த நிலையில் உள்ளன. இதை, மாவட்ட நிர்வாகமோ அல்லது நகராட்சி நிர்வாக அதிகாரிகளோ கண்டு கொள்ளவில்லை. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பல மணிநேரம் நிற்க வேண்டியுள்ளது. விரைவில், இருக்கைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.