ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தொடர் மழையால் கடந்த 6 நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் பகுதியில் ஒருவாரமாக தொடர்ந்து மழை பெய்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகம், போக்குவரத்து பணிமனை அலுவலகம், ஆயுதப்படை மைதானம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் நகரிலுள்ள தாலுகா அலுவலகம், கும்பகோணம், காரைக்குடி மண்டல போக்குவரத்து அலுவலக வளாகங்கள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.ராமேஸ்வரம் ரோடு, சின்னக்கடை, சிவஞானபுரம் ரோடு, ஆகியவை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் தற்போதைய மழைக்கு சேறும்சகதியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ராமநாதபுரம் நகராட்சியில் பல இடங்களில் மழையால் பாதாள சாக்கடை கழிவுநீர்ரோட்டில் ஓடுவதால் துர்நாற்றத்தினால் மக்கள் சிரமப்படுகின்றனர். சித்தார்கோட்டை சமத்துவபுரம் அருகே பாரதிநகர், அருந்தியர் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.நகராட்சி சத்யாநகர், எம்.ஜி.ஆர்., நகர், தங்கப்பாநகர் மற்றும் பட்டணம்காத்தான், சக்கரகோட்டை குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நகராட்சி, ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.