ஊத்துக்கோட்டை: மின் வேலியில் சிக்கி இறந்தவரை, 2 கி.மீட்டர் துாரம், துாக்கிச் சென்று வீசியவர், விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பூண்டி ஒன்றியம், கூடியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 25. கடந்த, 13ம் தேதி இவர், நண்பர் மாரிமுத்துவுடன், காணாமல் போன தன் ஆடுகளை தேடி சென்றார்.இரவு நேரம் ஆனதால், வீடு திரும்பும்போது, வீரராகவபுரம் அருகே, வயல்வெளியில் மின் வேலியை தொட்டதால் இறந்தார். பயத்தில், மாரிமுத்து தப்பி ஓடினார். நேற்று, வீடு திரும்பிய மாரிமுத்துவை விசாரித்தபோது, நடந்ததை அவர் கூறினார்.கன்னியப்பன் மனைவி பிரியா, 22, பென்னலுார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இறந்து கிடந்த இடத்தின் உரிமையாளர் ராஜேந்திரனை விசாரித்தனர்.தன்னிடம் போலீசார் வருவதை அறிந்த நிலத்தின் உரிமையாளர் ராஜேந்திரன், 46, விஷம் குடித்து விட்டார். போலீசார் விசாரித்ததில், தன் நிலத்தில் இறந்த கன்னியப்பனை, மகன் உதவியுடன், 2 கி.மீட்டர் துாரம் துாக்கிச் சென்று போட்டு வந்ததாக கூறினார்.போலீசார் கன்னியப்பன் பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, ராஜேந்திரன் திடீரென வாந்தி எடுத்தார். தான் விஷம் குடித்ததாக கூறியதை அடுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பென்னலுார்பேட்டை போலீசார், மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.