திருத்தணி: திருத்தணி அரசு மருத்துவமனையில், 'கோவிட் - 19' தடுப்பூசி முகாமை, திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா நேற்று துவக்கி வைத்தார்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு பொது மருத்துவமனையில், 'கோவிட் - 19' தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை, நேற்று, கலெக்டர் பொன்னையா துவக்கி வைத்தார்.பின் அவர் கூறியதாவது:மூன்று கட்டங்களாக, 'கோவிட் - 19' தடுப்பூசி வழங்கும் முகாமில், முதல் கட்டமாக, நேற்று, திருவள்ளூர் மாவட்டத்தில், ஆறு மையங்களில், 574 பேருக்கு, தடுப்பூசி போடப்பட்டது.முதலில், மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 'கோவிட்' தடுப்பூசி போடப்படும்.தனியார் மருத்துவமனைகளிலும், தடுப்பூசி இலவசமாக போடப்படும். தடுப்பு போட்டுக் கொள்ள அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார பணியாளர்களிடம் முன்பதிவு செய்து கொண்டால், அவரது, மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ் ., வரும். பின், குறிப்பிட்ட தேதியில் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.மேலும், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மாவட்டம் முழுதும் படிபடியாக தடுப்பூசி போடப்படும். முகாம்கள் அதிகரிக்கப்படும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.துவக்க நிகழ்ச்சியில், திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் அரசி, மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் இளங்கோவன், துணை இயக்குனர் ஜவஹர், திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராதிகாதேவி உட்பட மருத்துவர்கள் பங்கேற்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம்பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி நேற்று துவக்கி வைத்தார். முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை பார்வையிட்டார்.இது குறித்து, கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, திருப்புட்குழி மற்றும் மதுரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என, மூன்று இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும். 100 மருத்துவ பணியாளர்கள் என, மொத்தம், 300 பணியாளர்களுக்கு, தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி போடப்பட்ட அனைவரும், கண்காணிப்பு அறையில் கண்காணிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.