பழவேற்காடு: பழவேற்காடு அருகே, நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர், நீரில் மூழ்கி இறந்தார்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, காணும் பொங்கல் நாளான நேற்று, பழவேற்காடில் சுற்றுலாப் பயணியர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.போலீசார் பழவேற்காடு - -பொன்னேரி சாலையில், ஆண்டார்மடம் அருகே சோதனைச்சாவடி அமைத்து, சுற்றுலாப் பயணியரை திருப்பி அனுப்பினர்.இதில், சென்னை, மணலியை சேர்ந்த பாலாஜி, 32, மற்றும் அவரது நண்பர்கள் மூவரும், போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.போலீசார் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து, நண்பர்கள் நான்கு பேரும் ஆண்டார்மடம் கிராமம் அருகே உள்ள ஆற்றில் குளிக்க சென்றனர். ஆழமான பகுதியில் சென்ற, நான்கு பேரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று, மூன்று பேரை மீட்டனர்.சிறிது நேரத்திற்கு பின், சேற்றில் சிக்கி மூழ்கிய பாலாஜியை சடலமாக மீட்டனர்.