ஈரோடு:ஈரோட்டில் மில் அதிபர் வீட்டில், 45 சவரன் நகை, 95 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது.
ஈரோடு, சூளை, காவேரி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 49; வீரப்பன்சத்திரத்தில் அம்மன் பிராசசிங் மில் நடத்தி வருகிறார். மனைவி சிவகாமி; ஒரு மகன், மகள் உள்ளனர். ஏழு மாதத்துக்கு முன் வீடு கட்டி குடும்பத்துடன், இங்கு குடிவந்தனர்.
பொங்கல் பண்டிகை கொண்டாட கடந்த, 13ல் எழுமாத்துாரில் உள்ள பண்ணை வீட்டுக்கு, குடும்பத்துடன் செந்தில்குமார் சென்றார். நேற்று காலை, குடும்பத்துடன் வீடு திரும்பினார். வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோ உடைக்கப் பட்டிருக்க, அதில் வைக்கப்பட்டிருந்த, 45 சவரன் நகை, 95 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது.
வீட்டின் பின்புற இரும்பு கேட்டை உடைத்து கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்தது தெரிந்தது. வீரப்பன்சத்திரம் போலீசார் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளின் அடிப்படையில், விசாரிக்கின்றனர்.