ஆண்டிபட்டி:தேனிமாவட்டம் வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு மதகுகளை இயக்கி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து விட்டார்.
வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அணை நீர் மட்டம் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு 69 அடியாக உயர்ந்தது.(மொத்த உயரம் 71 அடி). இதனை தொடர்ந்து அணையில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. வழக்கமாக அணை நீர் மட்டம் 67 அடியை கடந்ததும் 58-ம் கால்வாய் வழியாக நீர் திறக்கப்படும்.
அதன்படி நேற்று மதியம் 1:30 மணிக்கு மதகுகளை இயக்கி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீர் திறந்து விட்டார். கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி வீதம் நீர் வெளியேறுகிறது. இந்த நீரால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் 1912 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 373 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும்.
கலெக்டர் பல்லவிபல்தேவ், ரவீந்திரநாத் எம்.பி., செயற்பொறியாளர் செல்வம், ஆண்டிபட்டி ஒன்றிய தலைவர் லோகிராஜன், துணைத்தலைவர் வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.--------