ஈரோடு:டாக்டர்கள் அனைவரும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, ஐ.எம்.ஏ., நிர்வாகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின், தேசிய துணை தலைவர் டாக்டர் ராஜா,ஈரோட்டில் கூறியதாவது:ஈரோடு அரசு மருத்துவமனையில், நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். பெரிய வலி, சிரமம் இல்லை. எனவே, மக்கள் அச்சப்பட தேவையில்லை. டாக்டர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதை இந்திய மருத்துவ சங்கம், வேண்டுகோளாக வைத்துள்ளது.
தற்போது அரசு மருத்துவமனையில் மட்டும், தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தனியார் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் அதிக மக்களை சென்றடையும். தனியார் மருத்துவமனை இப்பணியை சேவையாக செய்வார்கள்.மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகம், வதந்தி, குழப்பம் ஏற்படுகிறது.
இதை கட்டுப்படுத்த, மக்களிடம் தைரியத்தை ஏற்படுத்த, அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அச்ச உணர்வு நீங்கி, மக்கள் தாங்களாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.