சத்தியமங்கலம்:'இரிடியம்' மோசடி வழக்கில், தலைமறைவான இருவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சென்னை, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் மோகன். இவரது கார் டிரைவர் சுரேஷ், நண்பர் ஜாய். இவர்களை ஒரு கும்பல், தங்களிடம் 'இரிடியம்' இருப்பதாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு, வரவழைத்தனர்.
அவர்களை காரில் கடத்தி சென்ற கும்பல், அதே பகுதியில் தோட்டத்தில் அடைத்து வைத்து, பணம் கேட்டு மிரட்டியது. மோகனின் மனைவி, சத்தி போலீசில் புகார் அளித்தார்.இந்நிலையில், அதே பகுதியில் இருந்த கும்பலை, போலீசார் சுற்றி வளைத்தனர். ஒன்பது பேரை கைது செய்தனர். தப்பிய ஆறு பேரை, தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே, புதுசூரங்குடி கிராமத்தை சேர்ந்த மணி, 56; இவர், போலீசாக பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர். கோவை, தொண்டாமுத்துாரை சேர்ந்த டெய்லர் சிவா, 52, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.