விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் விழிப்புணர்வை அதிகப்படுத்த கண்டிப்புடன் மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும்.
மாவட்டத்தில் 2020ல் மட்டும் 63 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021ல் தற்போது வரை மூன்று வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் 20 சதவீதம் . காதலித்து வீட்டை விட்டு வெளியேறும் 18 வயது பூர்த்தியாக சிறுமிகளின் எதிராக நடக்கும் குற்றங்கள் 80 சதவீதம் என போக்சோ வழக்குகள் பதியப்படுகின்றன.
இதில் பெரும்பாலான வழக்குகள் ஊரக பகுதிகளில் போடப்பட்டவை. கிராமப்புறங்களில் இன்னும் அதிகளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஊராட்சிகள் அளவில் குழு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிறுவர்களுக்கும் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். அவ்வாறு யாரேனும் வரம்பு மீறினால் உடனடியாக காவலன் செயலியை பயன்படுத்தி புகார் அளிப்பது குறித்து அறிவுறுத்த வேண்டும்.
இதன் மன அழுத்தத்தில் காணப்படும் சிறுவர்களிடம் பெற்றோர் பேசி அவர்களது பிரச்னைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் பலாத்காரம், 18 வயதுக்கு முன்பு காதல் செய்வது குறித்து பெற்றோரே பக்குவமான முறையில் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்து கூற வேண்டும். இன்னொரு பக்கம் பெண் குழந்தைகளை துன்புறுத்தும் கயவர்கள் மீது போக்சோ போன்ற கடுமையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
மாவட்ட நிர்வாகமும் விழிப்புணர்வை அதிகப்படுத்தி குற்றங்களை தடுக்க வேண்டும். கண்காணிப்பு அதிகமாக இருப்பதால் தான் வழக்குகள் அதிகமாக போடப்படுவதாக போலீசார் தரப்பு கூறினாலும், வழக்குகளை காட்டிலும் விழிப்புணர்வை அதிகப்படுத்துவது ஒன்றே, இது போன்ற குற்ற சம்பவங்கள் அடுத்தடுத்த நடக்காமல் இருக்க வழிவகை செய்யும்.............
ஆன்லைன் வகுப்பில் விழிப்புணர்வு
சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு மிகவும் அவசியமான ஒன்று. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்துவது போல் போக்சோ , வன்முறை தடுப்பு முறைகள் குறித்தும் விரிவுரை வழங்கலாம். இதன் மீதான விழிப்புணர்வு பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும்.விஜயகுமார், தனியார் ஊழியர்.