திருப்பூர்,:திருப்பூர் நகரில் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த பல்வேறு ரோடுகள், தொடர் மழையால் மேலும், அரிக்கப்பட்டு வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கி வருகிறது.திருப்பூர் மாநகராட்சியில், 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் 50 கி.மீ., நீளத்தில் அமைந்துள்ளது.
இது தவிர நகரின் முக்கியமான பல்வேறு ரோடுகள் மாநகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது.அவ்வகையில், 400 கி.மீ., தார் ரோடு, 250 கி.மீ., கான்கிரீட் ரோடுகள், 25 கி.மீ., நீளம் மெட்டல் ரோடுகள், மாநகராட்சி பகுதியில் உள்ளன.தற்போது 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல்வேறு ரோடுகள் 'ஸ்மார்ட் ரோடுகளாக' மாற்ற திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. மீதமுள்ள பல்வேறு ரோடுகள் உரிய பராமரிப்பின்றி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
திருப்பூரில் உள்ள ரோடுகள், ஏறத்தாழ, 2 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளன. ஆனால், நகரில் தினமும், ஏறத்தாழ, ஆறு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால், ரோடுகளின் பயன்பாடு மும்மடங்கு அதிகம் உள்ளது.ரோட்டின் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளாமலும், அதிக வாகன போக்குவரத்து காரணமாகவும் நாளுக்கு நாள் மோசமான நிலையிலிருந்து மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டுள்ளது.இதில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக இந்த ரோடுகளின் நிலை மேலும் கவலைக்கிடமாக மாறி விட்டது.
உரிய மழை நீர் வடிகால் வசதியில்லாத ரோடுகளில் மழை நீர் நாட்கணக்கில் தேங்கி நிற்கிறது. ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ள ரோடுகளில் மழை நீர் தேங்கி, அரிக்கப்பட்டுள்ளது.பார்க் ரோடு, காலேஜ் ரோடு, சின்னாண்டிபாளையம் முத்து நகர் வழியாக பெரியாண்டிபாளையம் செல்லும் ரோடு, கொங்கு மெயின் ரோடு, யூனியன் மில் ரோடு, எம்.எஸ்., நகர், பெரிச்சிபாளையம் திரு.வி.க., நகர் ரோடு, எஸ்.ஆர்., நகர் வடக்கு, குளத்துப்பாளையம் - பெரியாண்டிபாளையம் ரோடு, லட்சுமி நகர், பிரிட்ஜ்வே காலனி ரோடுகள், மழையால் பெருமளவு சேதம் அடைந்துள்ளன.எனவே, இந்த ரோடுகளில் சீரமைப்பு பணி உடனே மேற்கொள்ள வேண்டும்.