வால்பாறை:ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வழியில்லாத அளவிற்கு, வால்பாறை நகரில் போக்குவரத்து நெரிசல், அதிகரித்துள்ள அவல நிலையை மாற்ற, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.வால்பாறை நகரம், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் மிகவும் குறுகலான இடத்தில் அமைந்துள்ளது. ரோட்டின் இருபுறமும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி, சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துக்களும் நடக்கிறது.இதனால், வால்பாறை மக்கள் நாள்தோறும், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, சுப்பிரமணிய சுவாமி கோவில் செல்லும் வழி, பழைய பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை ஆகிய இடங்களில் ரோட்டை ஆக்கிரமித்து, அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு, போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள, ஆக்கிரமிப்புக்களை அகற்ற போலீசாரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், நகரில், நாள்தோறும் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விடுமுறையின் காரணமாக, வால்பாறையில் சுற்றுலா பயணிகள் அவர்களது வாகனங்களை நிறுத்த, 'பார்க்கிங்' வசதி இல்லாததால் நடுரோட்டில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உள்ளுர் வாகனங்களும், சுற்றுலா வாகனங்களும் நிறுத்த நகராட்சி சார்பில், 'பார்க்கிங்' வசதி செய்து தர வேண்டும்.