பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் பருவம் தப்பி பெய்யும் மழையால், மானாவாரி பயிர்களின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.பொள்ளாச்சி பகுதியில் ஜூன் - ஆகஸ்ட் மாதங்களிடையே தென்மேற்கு பருவமழை, அக்டோபர் - டிசம்பர் இடையே வடகிழக்கு பருவமழை ஏப்ரல் - மே மாதங்களில் கோடை மழை பெய்யும் பருவம் ஆகும். இதைக் கணக்கிட்டே, மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பருவமழைகளை நம்பி, நிலக்கடலை, சோளம் அதிகளவில் மானாவாரியாக பயிரிடப்படுகிறது.இந்தாண்டும், வடகிழக்கு பருவமழையை கணக்கிட்டு, மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பனிக்காலத்தில் விளையும் கொண்டைக்கடலை, கோமங்கலம், கோலார்பட்டி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.ஆனால், மழை பெய்ய வேண்டிய அக்டோபர், நவம்பரில் போதிய மழை இல்லை. ஜனவரி பிறந்து தாமதமாக துவங்கிய மழை, இன்னும் நீடித்து வருகிறது. இது, மானாவாரி பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.சோளப்பயிர்கள் கதிர் பிடிக்கும் பருவத்தில் எதிர்பாராமல் பெய்யும் மழையால், கரிப்பூட்டை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தேவையான தீவன விளைச்சல் கூட குறைந்துள்ளது. இந்த பருவம் தப்பிய மழையால், பனிக்கடலை விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி கூறுகையில், ''தற்போது பெய்து வரும் மழை, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். தற்போது, தென்னை மரத்துக்கு உரம் அளிக்கலாம். ரசாயன உரம், தொழு உரம், உயிர் உரங்கள் அளிக்கும் போது, பாசனம் செய்யும் தேவை இருக்கும். மழையில் பயிர்கள பாதிக்கப்படுவதை தவிர்க்க, விளைநிலத்தில் மழைநீர் தேங்காமல் வடித்து விட வேண்டும். பண்ணைக்குட்டைகளில் மழைநீரை சேகரித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம்,'' என்றார்.