கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள அரசம்பாளையத்தில், உள்ள குட்டைகள் துார்வாரப்படாமல் உள்ளது.அரசம்பாளையம் கிராமத்தில், காரச்சேரி செல்லும் ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் குட்டைகள் உள்ளது. இதில், இப்பகுதியில் பெய்யும் மழை தண்ணீர் தேங்கி வந்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி வந்தது. குடிமராமத்து பணிகளும் துவங்கியுள்ள நிலையில், இக்குட்டைகளை இதுவரையிலும், சுத்தப்படுத்தவும், துார்வாரப்படவும் இல்லை.மேலும், மழை தண்ணீர் வரும் வழிப்பாதைகளும், மரம், செடிகளால் அடர்ந்து காணப்படுவதால், குட்டைக்கு தண்ணீர் வராமல் உள்ளது. மேலும், மற்றொரு குட்டையில், கிராமத்தில் உள்ள கழிவு நீர் முழுவதும் குட்டைக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால், கழிவு நீர் தேங்கி நின்று, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழைநீரை குட்டையில் தேக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இக்குட்டைகளை துார்வார ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தும், கழிவு நீர் தேங்கவிடாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.