நடுவீரப்பட்டு; பாலுார் - மேல்பட்டாம்பாக்கம் ரயில்வே கேட் வரை போடப்படும் தார் சாலைப் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த பாலுார் கடைவீதியிலிருந்து சித்தரசூர், நடுக்குப்பம் மின்வாரிய துணை மின்நிலையம், நத்தமேடு வழியாக மேல்பட்டாம்பாக்கம் ரயில்வே கேட் வரை தார்சாலை போடும் பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன் துவங்கியது. இந்த சாலையில் கல்வெர்ட் கட்டும் பணி துவங்கியதிலிருந்து இப்பகுதிக்கு வந்து செல்லும் ஒரு பஸ்சும் நிறுத்தப்பட்டது.இதனால், இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 3 கி.மீ., துாரம் நடந்து சென்று பஸ் ஏறிச் செல்கின்றனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் இப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள் அவதியடையும் நிலை உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம், தார்சாலையை உடனடியாக போடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.