சூலுார்:நீர் வழிப்பாதையில் ரசாயன கழிவுகள் கொட்டப்படுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சுல்தான்பேட்டை அடுத்த பெரிய கம்மாளப்பட்டியில் இருந்து ஜல்லிப்பட்டி செல்லும் சாலையையொட்டி நீர் வழிப்பாதை உள்ளது. இதில், ரசாயன கழிவுகள் மற்றும் இறந்த கோழிகளை வீசி செல்வதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:கோழிப்பண்ணைகளில் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், கழிவுகள் மற்றும் நோய் வாய்ப்பட்டு இறந்த கோழிகளை, டிராக்டரில் கொண்டு வந்து இந்த நீர் வழிப்பாதையில் கொட்டி செல்கின்றனர். இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.கழிவுகளால், சுற்றுப்பகுதியில் உள்ள பாசன கிணறுகளில் நீர் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரில் அடித்து செல்லப்படும் ரசாயன கழிவுகள், ஜல்லிப்பட்டி, சாலைப்பாளையம், சின்னப்புத்துார் உட்பட கிராமங்களில் உள்ள தடுப்பணைகளில் தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. கழிவுகளில் மொய்க்கும் ஈக்களால், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதிகளுக்கு, பல்வேறு பறவைகள் வந்து செல்வதால், அவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. கழிவுகளை கொட்டி, நிலம், நீர் மற்றும் காற்றை மாசுபடுத்தும் நபர்களை கண்டுபிடித்து, வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.