சூலுார்:''வீடுகள், தொழில் நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருப்பதை, கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்,'' என, அறிவுறுத்தப்பட்டது.சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நீர்வள மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. பாரம்பரிய நீர் மேலாண்மை, தற்போதைய நிலை, நீராதாரங்களை மேம்படுத்துவதில் ஊரக வளர்ச்சித் துறையினர் பங்கு, மழை நீர் சேகரிப்பு, குடிமராமத்து பணிகள், ஜல்சக்தி அபியான் திட்டம் குறித்து விளக்கப்பட்டது.நீர்வள மேலாண்மை குறித்து முதுநிலை பயிற்றுனர்கள் பேசியதாவது:ஊரில் குளம், குட்டைகள் அமைத்து, அதற்கான நீர் வழித்தடங்களையும் அமைத்திருந்தனர் நம் முன்னோர். தொட்டி கட்டு வீடுகள் அமைத்து, மழைநீரை நேரடியாக பெற்று பயன்படுத்தினர். தற்போது, குடிமராமத்து திட்டத்தின் கீழ், குளம், குட்டைகள் துார் வாரப்பட்டுள்ளன. அவற்றில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல், உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும்.வீடுகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.மத்திய அரசு வாயிலாக ஜல்சக்தி அபியான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக ஊராட்சிகளில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தும் விழிப்புணர்வை, மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.யூனியன் சேர்மன் பாலசுந்தரம் தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் சுப்புலட்சுமி, ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை பயிற்றுனர்கள் பாலமுருகு, கலியவரதன், வீரமுத்து, வண்டார்குழலி மற்றும் ஊராட்சி தலைவர்கள், செயலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.