கோவை:கோவை மத்திய ரயில் நிலையத்தில், பயணிகள் வசதிக்காக ஆதார் பதிவு மையம் அமைக்க தபால்துறை திட்டமிட்டுள்ளது.கோவையில் தலைமை தபால் நிலையம் உட்பட, 50க்கும் மேற்பட்ட தபால்நிலையங்களில், ஆதார் சேவை வழங்கப்படுகிறது.கல்வி, வேலைக்காக வெளி மாநிலம் மற்றும் ஊர்களிலிருந்து வரும் ரயில் பயணிகள் பயனுறும் வகையில், ரயில்வே தபால் நிலையத்தில், ஆதார் மையம் அமைக்க கோவை தபால்துறை திட்டமிட்டுள்ளது.ரயில்வே மெயில் சர்வீஸ் கோவை கோட்ட கண்காணிப்பாளர் கோபிநாதன் கூறுகையில், ''கல்வி மற்றும் வேலை தொடர்பாக, உடனடியாக ஆதார் சேவை தேவைப்படும் ரயில் பயணிகளுக்காக ஆதார் மையம், ஆர்.எம்.எஸ்., எனப்படும் ரயில்வே தபால் நிலையத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பில், கணினி மற்றும் ஆதார் பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்கேற்ப, செயல்படும் நேரம் முடிவு செய்யப்பட்ட பின்னர், புதிய ஆதார் பதிவு மையம் சில நாட்களில் துவங்கப்படும்',''என்றார்.