கோவை:போலி கையெழுத்திட்டு, 'செக்' மோசடியில் கைது செய்யப்பட்ட நபர் விமானங்களில் பறந்து பல்வேறு மாநிலங்களிலும் கைவரிசை காட்டியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டிலுள்ள கனரா வங்கியில் கணக்கு வைத்திருந்த பெண் ஒருவரின் கையெழுத்தை போலியாக போட்டு காசோலை வாங்கி, வங்கியில் செலுத்தி, 3.76 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது. புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து, ஒடிசா மாநிலம் கட்டாக்கை சேர்ந்த ஹிமான் சுகுமார் மோபத்ரா, 49 என்பவரை கைது செய்தனர்.இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகின.போலீசார் கூறியதாவது:மோசடியில் ஈடுபட்ட மோபத்ரா நேர்த்தியாக உடையணிந்து கொண்டு வங்கிகளுக்குள் நுழைவார். அங்கிருக்கும் பெண் அல்லது முதிய வாடிக்கையாளர்கள் அருகில் சென்று, சலான் பூர்த்தி செய்வது போல் பாசாங்கு செய்து அவர்களின் கையெழுத்து, வங்கி கணக்கு எண், பெயர், ஆகியவற்றை நோட்டமிடுவார்.அதன் பின், வங்கி அதிகாரிகளிடம், வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக பதிவிட்ட கடிதத்தை அளித்து காசோலை பெற்று விடுவார். தொடர்ந்து காசோலை மூலம், பணத்தை திருடி விடுவார். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளில் இவர் கைவரிசை காட்டியுள்ளார்.அதிகபட்சமாக கர்நாடகா மாநிலம், பெங்களூருவில், 5.20 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். பல மாநிலங்களுக்கும் விமானத்தில் பயணம் செய்யும் மோபத்ரா, நட்சத்திர ஓட்டலில் தங்குவது வழக்கம். டிப்டாப்பாக உடையணிந்து வங்கிகளுக்குள் செல்வதால், வங்கி அதிகாரி என, வாடிக்கையாளர்கள் நினைத்துக் கொள்வதை இவர் சாதகமாக பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.இவ்வாறு, போலீசார் கூறினர்.