கோவை:'ஜே.இ.இ., முதன்மை தேர்வு தொடர்பான போலியான இணையதளங்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வந்த ஜே.இ.இ., மெயின் தேர்வு, வரும் கல்வியாண்டு முதல் பிப்., மார்ச், ஏப்., மே என, நான்கு கட்டங்களில் நடத்தப்படுகிறது. பிப்., மாதம் துவங்கி, ஒவ்வொரு மாதமும் நடக்கும் தேர்வில், மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு மாதங்களிலும் தேர்வை எழுதலாம்.இதன்படி, பிப்., 23ம் தேதி முதல், 26 வரை நாடு முழுவதும் முதற்கட்ட தேர்வு நடக்க உள்ளது. இச்சூழலில் ஜே.இ.இ., முதன்மை தேர்வு தொடர்பான போலி இணையதளங்களை மாணவர்கள் தவிர்க்க தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.போலி இணையதளங்களில் விண்ணப்பங்களை பதிவேற்றுவது, விண்ணப்ப கட்டணங்களை செலுத்துவது போன்றவற்றை மாணவர்கள் முற்றிலும் தவிர்க்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 2021 கல்வியாண்டுக்கான ஜே.இ.இ., மெயின் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப 'போர்டல்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்கள், இ-மெயில் முகவரி, மொபைல்போன் எண் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களை பார்த்து தகவல்களை தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.