மதுரை : மதுரையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் கருவிக்கு சர்வர் இணைப்பு கிடைக்காததால் பொருட்கள் வழங்குவதில் கடும் தாமதம் ஏற்பட்டு நுகர்வோருக்கும் ரேஷன் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாவட்டத்தில் 1386 ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. பொங்கலையொட்டி ரூ.2500 மற்றும் பரிசுத்தொகுப்பு 8.88 லட்சம் அரிசி கார்டுதாரர்களுக்கு வழங்க ரூ.222 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் 98 சதவீதம் கார்டுதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு வழங்கும்பணி தொடர்ந்து நடக்கிறது.
இந்நிலையில் சில கடைகளில் சர்வர் பழுதால் கார்டுதாரர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்க முடியவில்லை. ஒரு கார்டுக்கு பொருட்கள் வழங்க ஒரு மணி நேரத்திற்கும் மேலானது.
விற்பனையாளர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் 100 பேருக்கு கூட நேற்று பொருட்கள் வழங்க முடியவில்லை. சர்வர் பிரச்சினைக்காக நுகர்வோர்கள் எங்களுடன் வாக்குவாதம் செய்கின்றனர். பி.ஓ.எஸ்.,ல் 2ஜி சிம் கார்டுக்கு பதில் 4ஜி கார்டு வழங்க கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பயோ மெட்ரிக் முறை பாதுகாப்பானதுதான். அதே நேரம் தொடர்ந்து ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.