ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் நெல், மிளகாய்,சோளம், பருத்தி, கேழ்வரகு என 3 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் சேதமடைந்துள்ளது.நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்பல்வேறு ஒன்றியங்களை சேர்ந்த ஏராளமானவிவசாயிகள் அழுகிய பயிர்களுடன் வந்து தங்களுக்கு நுாறு சதவீத இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக 1.28 லட்சம் எக்டேர் பரப்பளவில் நெல்சாகுபடி நடக்கிறது. இதேப்போல 19ஆயிரம் ஏக்கரில் 50 ஆயிரம் டன் மிளகாய் சாகுபடி நடக்கிறது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையை நம்பி அக்டோபருக்கு முன்னதாகவே வயலை தயார் செய்து நெல் விதைக்கின்றனர்.தற்போது வளர்ந்து அறுவடை நேரத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் முழ்கி அழுகியுள்ளன. மேலும் மிளகாய்ச் செடிகள், சோளம், கொத்தமல்லி, கேழ்வரகு, பருத்தி உள்ளிட்டவைகளும் தண்ணீர் தேங்கி அழிந்து வருகின்றன.
இதுவரை 3 லட்சம் ஏக்கருக்குமேல் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். வேளாண்துறையினர், வருவாய்துறையினர் ஒவ்வொரு பகுதியாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலகம்முற்றுகை
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இ.கம்யூ., கட்சியினர் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரண நிதியாக உடனடியாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வலியுறுத்தி அழுகி முளைத்துஉள்ள நெற்பயிர்கள், மிளகாய்செடிகள், சோளம், கம்பு, திணை, கொத்தமல்லி பயிர்களுடன் வந்தனர்.நயினார்கோயில் ஒன்றியம் பொளூர், முதுகுளத்துார், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி சத்திரக்குடி, போகலுார் ஆகிய பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அழுகிய மிளகாய்செடிகள், நெற் பயிர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
இதில் கடன்வாங்கி செலவு செய்தும், அறுவடை நேரத்தில் பயிர்கள்மூழ்கிவிட்டன. கால்நடைகளுக்கு தீவனம் கூட கிடைக்கவில்லை, மிகவும் சிரமப்படுகிறோம். முதற்கட்ட நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்.சேதமடைந்துள்ள பயிர்களுக்கு நுாறு சதவீதம் முழு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனுஅளித்துள்ளனர். அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறியுள்ளார்.