ராமநாதபுரம் மாவட்டத் தின் நெற்களஞ்சியமாக திகழும் இத்தாலுகாவில்பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.
குஞ்சங்குளம், நகரிகாத்தான், மல்லனுார் உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பணைகள் உள்ளன. சில நாட்களாக பெய்த மழையால் சேனவயல், அஞ்சுகோட்டை, செங்காலன்வயல் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டது.சூச்சனி, நகரிகாத்தான், மருதங்குடி உள்ளிட்ட தரைப்பாலங்களில் அளவிற்கு அதிகமான தண்ணீர் சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கிராம சாலைகள் சேதமடைந்தன.குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. பல்வேறு பாதிப்புகளால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.எட்டுகுடி பத்திநாதன் கூறியதாவது:இத் தாலுகாவில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. பெரும்பாலான கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடைபெறாததால்மழை நீர் தேங்க வாய்ப்பில்லாமல் கழுங்கு வழியாக வெளியேறிய நீர் வீணாக கடலில் கலந்தது.
இதே போல் குஞ்சங்குளம் உட்பட ஆங்காங்கே கட்டிய தடுப்பணைகளும் சேதமடைந்தது. தரைப்பாலங்களை உயர்த்தி கட்டாததால் போக்குவரத்து துண்டிக்கபட்டது. மல்லனுார், சிறுகம்பையூர் கிராம சாலைகளில் உடைப்பு ஏற்பட்டதால் மக்கள் சிரமம் அடைந்தனர் என்றார்.
சின்னக்கீரமங்கலம் ரெத்தினமூர்த்தி கூறியதாவது:மழையால் கிராமங்களில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தது. ஆறு, குளக்கால், வரத்துகால்வாய் என பல்வேறு இடங்களில் சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்துஉள்ளனர்.அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிப்பால் அந்த இடங்கள் மேடான பகுதியாக மாறி தாழ்வான குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
தற்போது ஐந்து நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வடியாததால் குடியிருப்போர் சிரமம் அடைந்துள்ளனர்.ஆகவே வரும் காலங்களிலாவது அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.