முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்து இருப்பதால் நோயாளிகள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அருகே திருவரங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொளுந்துரை, செல்லுார், அலங்கானுார், பொசுக்குடி உட்பட அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 200க்கும் அதிகமானோர் சிகிச்சை பெறுகின்றனர்.ஒரு சில நோயாளிகள் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைகாக முதுகுளத்துார், பரமக்குடி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும்பிரசவம் பார்க்கப்படுகிறது. சுகாதார நிலையத்திற்கு பல வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டுள்ள கட்டடத்தை அவ்வப்போது மராமத்து பணி மட்டும் செய்து வந்தனர்.தற்போது கட்டடம் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு மேற்கூரையின் சிமென்ட் பூச்சுக்கள் விழுந்து சேதமடைந்துள்ளது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், பணியாளர்கள் அச்சப்படுகின்றனர். சேதமடைந்துள்ள கட்டடத்தை மராமத்து பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.