பவானி: பவானி அருகேயுள்ள குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் குமார். 38; திருமணமாகாத இவர், பவானி புது பஸ் ஸ்டாண்ட் அருகில், கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதே பகுதியை சேர்ந்த திலகவதி, 40, கார்மெண்ட்ஸில் பணிபுரிகிறார். திருமணமான இவர், கணவரை பிரிந்து விட்டார். இருவருக்கும், ஐந்து ஆண்டுகளாக கள்ள தொடர்பு இருந்தது. நேற்று முன்தினம் இரவு, திலகவதி வீட்டுக்கு, குடிபோதையில் வந்த குமார், பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதனால், திலகவதி வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக தெரிகிறது. நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது, குமார் இறந்து கிடந்தார். அவரது தகவலின்படி பவானி போலீசார், உடலை கைப்பற்றி, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகே, சாவுக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.