சத்தியமங்கலம்: தமிழக - கர்நாடக எல்லையில், தமிழக அரசுக்கு சொந்தமான பெயர்ப்பலகைகள், மீண்டும் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், தாளவாடிமலையில் உள்ள ராமாபுரம் கிராமம், கர்நாடக எல்லை அருகில் உள்ளது. இங்கு வைக்கப்பட்டிருந்த, தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சித் துறை பெயர் பலகைகளை, கன்னட சலுவாளி அமைப்பினர், கடந்த, 10ம் தேதி அடித்து சேதப்படுத்தினர். இதுதொடர்பாக வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் மீது, தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம், தாளவாடி அருகே, பையனாபுரம் கிராமத்திலிருந்து கர்நாடக மாநிலம் ஒட்டரள்ளி செல்லும் சாலையில், எத்துக்கட்டி வனப்பகுதியில், தமிழக - கர்நாடக எல்லையில் வைக்கப்பட்டிருந்த, நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பெயர் பலகைகளை, மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். தாளவாடி போலீசார் ஆய்வு செய்தனர். இது குறித்து விசாரிக்கின்றனர். தாளவாடி மலைப்பகுதியில், மீண்டும் தமிழக அரசுக்கு சொந்தமான பெயர் பலகைகள், சேதம் செய்யப்பட்டது, பதற்றத்தை அதிகரித்துள்ளது.