ஓசூர்: அஞ்செட்டி அருகே, தொட்டல்லா அணை கட்டும் திட்டத்தை, பல்வேறு காரணங்களை கூறி, பொதுப்பணித்துறை நிறுத்தியுள்ளது. இத்திட்டத்துக்கு, மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கல்லுப்பாலம், பாலதொட்டனப்பள்ளி, குந்துக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில், கனமழை பெய்யும் போது, காட்டாற்று வெள்ளம் உருவாகுகிறது. அதேபோல், அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள யானை விழுந்த பள்ளம் என்ற ஆறு மற்றும் மேலும் சில கிளை ஆறுகள் அனைத்தும், அஞ்செட்டி அருகே ஒன்றாக சங்கமித்து, தொட்டல்லா என்ற சிற்றாறாக உதயமாகி, தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள, ராசிமணல் அருகே, காவிரி ஆற்றில் கலக்கின்றன.
காமராஜர் ஆட்சியில்: அஞ்செட்டி அருகே, கிளை நதிகள் ஒன்றாக சங்கமிக்கும் இடத்தில், தொட்டல்லா என்ற அணையை கட்ட வேண்டும் என, காமராஜர் ஆட்சியில் இருந்தே, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவ்வாறு செய்தால், வானம் பார்த்த பூமியாக உள்ள, 3,000 ஏக்கருக்கு மேலான நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், வறட்சி காலங்களில் கை கொடுக்கும் எனவும் விவசாயிகள் நம்புகின்றனர். பசுமை தாயகம் அமைப்பு சார்பில் கூட, தொட்டல்லா அணை கட்ட, மக்களிடம் ஒரு லட்சம் கையெழுத்து வாங்கப்பட்டது. ஆனால் இதுவரை தொட்டல்லா அணை கட்ட நடவடிக்கை இல்லை.
திட்ட அறிக்கை: கடந்த, 1999 - 2000ம் ஆண்டுகளில், தமிழக பொதுப்பணித்துறை தொட்டல்லா அணை கட்ட, 25 கோடி செலவாகும் என திட்ட அறிக்கை தயாரித்தது. ஆனால், இந்த திட்ட அறிக்கை, மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கவில்லை. 14 ஆண்டுகள் கழித்து, வனப்பகுதியில், 165 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். திட்ட மதிப்பீட்டில் பாதிக்கு மேல் நிலம் கையகப்படுத்தவே செலவாகும். காவிரி படுகையில் அணையை அமைத்தால், கர்நாடகா மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என, யூகத்தை காரணம் காட்டி, தமிழக பொதுப்பணித்துறை அணை கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.
சேமிக்கலாம்: தொட்டல்லா அணை கட்டினால், மழைக்காலங்களில் காவிரியாற்றில் கலக்கும் தண்ணீரை சேமிக்க முடியும். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மீண்டும் ஆய்வு நடத்தி, புதிய கருத்துரு தயாரித்து, தொட்டல்லா அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.