பவானி: ''தமிழகத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. மாணவ, மாணவியருக்கு வழங்க, 30 லட்சம் வைட்டமின் மாத்திரை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
காளிங்கராயன் வாய்க்கால், மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட, தை மாதம் ஐந்தாம் நாள், காளிங்கராயன் தினவிழாவாக, ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. காளிங்கராயன் தினமான நேற்று, ஈரோடு மாவட்டம் பவானி அருகே, காளிங்கராயன் அணைக்கட்டில், விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சியினர், அமைப்பினர், மணிமண்டபத்தில் உள்ள காளிங்கராயன் வெண்கல உருவச்சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரசு சார்பில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், எம்.எல்.ஏ.,க்கள், ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணி, ஈஸ்வரன், கலெக்டர் கதிரவன் உள்ளிட்டோர், திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து காளிங்கராயன் வாரிசுதாரர்கள் கவுரவிக்கப்பட்டனர். அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை (இன்று) பள்ளி திறக்கப்படுகிறது. அவர்களுக்கு தருவதற்காக, 30 லட்சம் வைட்டமின் மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அறிவிப்பு, சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், முதல்வருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.