கொடுமுடி: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஈரோடு அருகே, ரயில் முன் பாய்ந்து, காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.
ஈரோடு அருகே, தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாள பகுதியில், இளைஞர், இளம்பெண் உடல்கள், சிதறி கிடப்பதாக, ரயில்வே போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் வந்தது. போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி, இச்சிப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் மகன் யுவராஜ், 29; அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் மகள் பூர்ணிமா, 26, என்பதும் தெரிந்தது. தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில், யுவராஜ் வேலை பார்த்தார். ஈரோடு, மின்வாரிய அலுவலகத்தில், தொழில் நுட்ப பிரிவில், பூர்ணிமா பணிபுரிந்தார். இருவரும் காதலித்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், மனமுடைந்த இருவரும், மொபட்டில் தொட்டிபாளையத்துக்கு நேற்று வந்தனர். அப்போது வந்த ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இந்த சம்பவம், கொடுமுடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.