கடலுார் : தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைப் பின்பற்றி, கடலுார் மாவட்டநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத அளவை 20 சதவீதம் உயர்த்திவழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2001 ஆண்டு முதல் கடந்த 20 ஆண்டுகளில் வரலாறு காணாத வெள்ளம், வறட்சி, சுனாமி, புயல், அபரிமிதமான மழை என பல்வேறு இயற்கை சீற்றங்களை சந்தித்துள்ளது. குறிப்பாக கடலுார் மாவட்டம் ஆண்டு தோறும் ஏதேனும் ஒரு வகையில் பாதிப்பை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.அந்த வகையில், கடந்த நவம்பர் 23ம் தேதி 'நிவர்' புயலால் மாவட்டம் பெரும் பாதிப்புக் குள்ளானது.அதனைத் தொடர்ந்து, உருவாகிய 'புரெவி' புயலால் பெய்த கன மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் அளவிற்கு நெற்பயிர்கள், நீரில் மூழ்கி சேதமடைந்தன. நெற் பயிர்கள் மட்டுமின்றி வேர்க்கடலை, உளுந்து என அனைத்து பயிர்களும் தேசமடைந்தன. கடலுார் மாவட்டத்தில் பிரதான சாகுபடியான நெல் நடவு செய்த 50 சதவீத வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை பெய்த மழையால் பயிர்கள் முழுமையாக சாய்ந்தன.ஏழு நாட்களாக தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் அனைத்தும் முளைத்து விட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 16ம் தேதி முதல் மழை விட்டுள்ளதால் 10 தினங்கள் நிலம் காய்ந்தால் மட்டுமே இயந்திரம் மூலம் அறுவடை செய்யமுடியும் என்ற நிலை உள்ளது.அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய, மாவட்டத்தில் தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கலெக்டர் சந்திரசேகர சகாமுரி உத்தரவிட்டுள்ளார்.ஆனாலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 17 சதவீத ஈரப்பதம் நிர்ணயித்து கொள்முதலைத் துவக்கி உள்ளது.இந்த ஈரப்பத சதவீதத்தை 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து கூட்டியக்க பொதுச்செயலாளர் ரவீந்திரன் கூறுகையில், 'விவசாயிகள் நலன் கருதி மத்திய உணவுக்கழக அனுமதி பெற்று, 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசாணை பிறப்பித்திருப்பதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு செய்துள்ளார்.அது, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், பிற டெல்டா மாவட்டங்களுக்கு பொருந்தாது என கொள்முதல் செய்யும் அதிகாரிகள் தெரிவித்திருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் தற்போது தன்ணீர் வடிந்து காய்ந்து வரும் நிலையில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் வாங்க மறுக்கின்றனர்.எனவே தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பின்பற்றப்படும் 20 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யும் நடைமுறையை கடலுார் மாவட்டத்திற்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.