கடலுார் : 'கொரோனா' தொற்றால் மூடப்பட்டிருந்த பள்ளிகள், 10 மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. தொற்று படிப்படியாக குறைந்து, இயல்பு நிலை திரும்பியதால் கடந்த நவம்பர் 16ம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்து, பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.பெரும்பாலானோர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது.இந்நிலையில், பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்தது.
இதற்கு 70 சதவீத பெற்றோர் ஆதரவு தெரிவித்ததன் அடிப்படையில், 19ம் தேதி (நேற்று) பள்ளிகள் திறக்கப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, 10 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., என, 480 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 68 சதவீத மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.முன்னதாக, நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை துப்புரவு தொழிலாளர்கள் அந்தந்த பகுதி பள்ளிகளில் துாய்மைப் பணி மேற்கொண்டனர்.
வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மட்டும், சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர்.பள்ளிக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்பநிலை 'தெர்மோ ஸ்கேனர்' மூலம் பரிசோதிக்கப்பட்டது. வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து, மாணவர்கள் முகக்கவசம் அணிந்தும், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து கொண்டு வகுப்பறையில் அமர்ந்தனர்.மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ரோஸ் நிர்மலா மேற்பார்வையில், மாவட்டக் கல்வி அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட குழுக்கள், வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என பள்ளிகளில் ஆய்வு செய்தனர்.