திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், ஜன., மற்றும் பிப்., மாதங்களை உள்ளடக்கிய குளிர் காலத்தில், அதிக பட்சமாக, 20 மி.மீ., அளவுக்கு மட்டுமே மழை பெய்யும். இந்தாண்டு, எதிர்பாராத வகையில், மார்கழி மாதத்தில், பனிப்பொழிவை விரட்டி, சாரல்மழை பெய்தது.குறிப்பாக, மானாவாரி பயிர் அறுவடை பணியை துவக்க முடியாதபடி, தொடர்ந்த 10 நாட்களாக மழை பெய்து கொண்டிருந்தது. கடந்த, 1ம் தேதி முதல் நேற்று மாலை வரை, திருப்பூர் வடக்கில், 85.86 மி.மீ., - அவிநாசியில், 69.40 மி.மீ., காங்கயத்தில் 103 மி.மீ., பல்லடத்தில் 122 மி.மீ., மூலனுாரில் 110 மி.மீ., உடுமலையில் 125.60 மி.மீ., ஊத்துக்குளியில், 69.30 மி.மீ., குண்டடத்தில், 157 மி.மீ., மடத்துக்குளத்தில், 144 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.இதுவரை இல்லாத அளவுக்கு, அமராவதி அணை பகுதியில், 150 மி.மீ., திருமூர்த்தி அணை பகுதியில், 181 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. மாவட்ட அளவில், சராசரியாக, 115 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'குளிர் காலத்தில் பெய்யும் மழையால், நீராதாரம் பெருகும்; இருப்பினும், அறுவடை காலமழையால், தானிய மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. சோளத்தட்டு அறுவடை செய்த நிலையில் மழை பெய்ததால், தீவன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இனியாவது மழை இல்லாமல் இருந்தால், அறுவடை செய்து, உலர் தீவன சோளத்தட்டை பக்குவப்படுத்தி, பாதுகாப்பாக வைத்துவிடுவோம்,' என்றனர்.