அவிநாசி:அவிநாசியில் இருந்து கருமத்தம்பட்டி, சோமனுார் உள்ளிட்ட இடங்களுக்கு தினசரி, ஏராளமான பயணிகள் செல்கின்றனர். கோவை செல்லும் பஸ்சில் ஏறி, கருமத்தம்பட்டியில் இறங்கிக் கொள்வர். மாலை நேரங்களில், பயணிகள் கூட்டம் அதிமாக இருக்கும் சமயத்தில், கோவை செல்லும் பஸ்களில் கருமத்தம்பட்டி செல்லும் பயணிகள் ஏற, சில கண்டக்டர்கள் அனுமதிப்பதில்லை.திருப்பூரில் இருந்து கருமத்தப்பட்டிக்கு இயக்கப்படும் டவுன்பஸ் (32 ஏ) மாலை, 4:00 மணிக்கு அவிநாசியில் இருந்து கருமத்தப்பட்டி இயக்கப்படுகிறது. ஆனால், பஸ்சின் முகப்பில் கருமத்தம்பட்டி என, பெயர் பலகை இருந்தும் தெக்கலுார் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், பஸ்சில் ஏறும் பயணிகள் மீண்டும் இறக்கிவிடப்படுகின்றனர்.நடத்துனரிடம் கேட்ட போது,''மாலையில், ஒரு 'ட்ரிப்' தெக்கலுார் வரை மட்டும் தான் இயக்கப்படும். தெக்கலுார் என்ற பெயர் பலகை இல்லாததால், கருமத்தப்பட்டி என்ற பெயர் பலகையை வைத்துள்ளோம்,'' என்று காரணம் கூறுகின்றனர்.இவ்வாறு, கூட்ட நெரிசலில் பயணிகள் அலைகழிக்கப்படுவதால், மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, பயணிகளின் பர்ஸ், மொபைல் போன் ஆகியவற்றையும் திருடி சென்று விடுகின்றனர். இதனால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.