திருப்பூர்:திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி கடந்த 17ம் தேதி நள்ளிரவு 12:45க்கு, அரசு பஸ் (டி.என்., 39 என் 0344) புறப்பட்டது. அதிகாலை 5:15க்கு பஸ் திருப்பூர் வந்தது; இங்கிருந்து காங்கயம் டிப்போவுக்கு சென்றது.டிரைவர் சுரேஷ்குமார், நடத்துனர் அண்ணாதுரை பணி முடிந்த புறப்பட்டனர். பஸ்சில் ஒரு மொபைல் போன் இருக்கையில் கிடந்தது. அந்த மொபைல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டார். 'அவிநாசியில் இருந்து பேசுகிறேன்; திருச்சியில் இருந்து பஸ்சில் வந்த போது மொபைல் போன் காணாமல் போய் விட்டது' என தெரிவித்துள்ளார்.நடத்துனர், நேரில் வந்தால் தருவதாக பதிலளித்தார். பயணி நேரில் வந்ததையடுத்து, அவரிடம் நடத்துனர் மொபைல்போனை திரும்ப வழங்கினார். நடத்துனர் அண்ணாதுரையை, திருப்பூர் மண்டல பொது மேலாளர் (வணிகம்) முத்துகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.