கோவை:கோவையில், ஊராட்சி திட்ட முகமையின் சார்பில், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் இதுவரை, 17 கோடியே 4 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில், 5,593 வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு, நாளொன்றுக்கு, ஒரு நபருக்கு, 55 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்கிற நோக்கத்துடன், இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி நிதி ஒதுக்கியுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் இணைப்பு, 2024க்குள் வழங்கும் நோக்கில், மாவட்டங்களுக்கு இது தொடர்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.கோவையில், 60 கிராம ஊராட்சிகளில் 311 குக்கிராமங்களில், 50,953 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக, 74 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன.
ஊராட்சி திட்ட முகமை இயக்குனர் (பொறுப்பு) ரூபன் சங்கர் ராஜ் கூறுகையில், ''ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், மேல்நிலைத்தொட்டி, ஆழ் குழாய் கிணறுகள், தரைமட்ட தொட்டிகள், குழாய் பொருத்தம் போன்ற பிரிவுகளில், 1,072 பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில், 623 பணிகள் பகுதிகளாகவும், 70 பணிகள் முழுமையாகவும் முடிக்கப்பட்டு, 5,593 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மார்ச், 31க்குள் இப்பணிகளை முடிக்கும் நோக்கில், பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன,'' என்றார்.