கோவை:மனைவியிடம் வரதட்சணை கேட்டு, கொடுமை செய்த கணவன் குடும்பத்தினர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.காளப்பட்டி அருகேயுள்ள திருமுருகன் நகரை சேர்ந்த பால்ராஜ் மகள் சுகன்யா ஜாஸ்மினுக்கும், 32, கணபதி, சி.எம்.எஸ்., பின்புறமுள்ள நேரு நகரை சேர்ந்த சார்லஸ் ஆபிரகாமிற்கும், நான்கு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில், கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு, சித்ரவதை செய்வதாக சுகன்யா ஜாஸ்மின், கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.மனுவில், 'திருமணத்தின் போது கணவன் குடும்பத்தினர், 175 சவரன் நகை, 25 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கேட்டனர். 100 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் கொடுத்தோம். மீதி நகை,பணம் கேட்டு சித்ரவதை செய்தனர். கோபித்து கொண்டு தந்தை வீட்டுக்கு சென்றேன். இதனால், எனது போட்டோ மற்றும் மொபைல் போன் எண்ணை, சமூக ஊடகங்களில் தவறாக பதிவு செய்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஏற்கனவே கொடுத்த நகை,பணத்தை திருப்பி கேட்டும் தர மறுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.மகளிர் போலீசார் விசாரித்து, கணவர் சார்லஸ் ஆபிரகாம், மாமனார் கிறிஸ்டோபர் ராஜ், டோரதி, ஆசிர் ஆகிய நான்கு பேர் மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.