திண்டிவனம்:திண்டிவனத்தில், அதிகாலையில் லாரி டிரைவரின் கவனக் குறைவால், மூன்று பஸ்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன.
சென்னையில் இருந்து சேலத்திற்கு, நேற்று முன்தினம் இரவு, மளிகை பொருட்களுடன், ஒரு லாரி புறப்பட்டது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ், 64, ஓட்டினார்.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம், நத்தமேடு அருகே வந்தபோது, டிரைவர் ரமேஷ் துாக்க கலக்கத்தில், லாரியை திடீரென தடம் மாறி, எதிர் திசையில் ஓட்டி வந்தார்.அப்போது, விழுப்புரத்தில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் டிரைவர், எதிரில் லாரி வருவதை கண்டு திடுக்கிட்டு, பிரேக் பிடித்தார்.
இதில், பின் தொடர்ந்து வந்த அரசு பஸ், ஆம்னி பஸ் மீது மோதியது. அரசு பஸ் மீது, பின்னால் வந்த ஆம்னி பஸ் மோதியது.இதில், அரசு பஸ்சின் இருபக்க கண்ணாடிகளும், அரசு பஸ் மீது மோதிய ஆம்னி பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து சேதமடைந்தன. ஆயினும், பஸ்களில் இருந்த பயணியர் காயமின்றி தப்பினர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தால், போக்குவரத்து பாதித்தது. திண்டிவனம் போலீசார், விபத்தில் சிக்கிய வாகனங்களை ஜே.சி.பி., மூலம் அகற்றி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.