திருப்பூர்:பி.ஏ.பி., பாசன நிலங்களுக்கு போதுமான அளவு நீர் வழங்க வலியுறுத்தி, காங்கயத்தில், விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினர்.
காங்கயம், வெள்ளகோவிலில் கடைகள் அடைக்கப்பட்டன.பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.,), திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகாவில் உள்ள, முத்துார், வெள்ளகோவில் பகுதிகள், கடைமடையாக உள்ளன. இப்பகுதிகளுக்கு, ஒவ்வொரு சுற்று தண்ணீர் திறக்கும்போதும், சரியான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை.
காங்கயம் தாலுகா எல்லையில் உள்ள, பி.ஏ.பி., பாசன நிலங்களுக்கு, அரசு விதிமுறையில் குறிப்பிட்டுள்ள அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, காங்கயம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே நேற்று நுாற்றுக்கணக்கான விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினர்.
இதற்கு ஆதரவு தரும் வகையில், காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில், மருந்துக்கடை, பால் விற்பனை நிலையங்கள் நீங்கலாக, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வெள்ளகோவில் பி.ஏ.பி., விவசாயிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., திட்ட அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
கலெக்டரை சந்தித்து முறையிட்ட பிறகும், உறுதியான நடவடிக்கை இல்லை. இதனால்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இனியாவது, கடைமடை பகுதிக்கு சேர வேண்டிய பாசன தண்ணீரை, முறையாக வழங்க வேண்டும்' என்றனர்.