கூடலுார்:முதுமலை அருகே இரண்டு மாதமாக காயத்துடன் சுற்றி வந்த காட்டு யானை, பரிதாபமாக பலியானது.முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனப்பகுதியில் காயத்துடன் சிரமப்பட்டு வந்த, காட்டு யானைக்கு, கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்தனர். அந்த யானை குடியிருப்பு பகுதியில் சுற்றி வந்ததால், இரவில் சில சமூக விரோதிகள், தீப்பந்தத்தால் யானையின் காதில் சூடு வைத்துள்ளனர்.இதனால், காயம் ஏற்பட்டு, அதன் வலி தாங்க முடியாமல், யானை தண்ணீரில் நின்றுள்ளது. காதின் ஒரு பகுதி அழுகி, அறுந்து கீழே விழுந்தது. காயத்திலிருந்து அதிகளவில் ரத்தம் வெளியானதால், யானை பலவீனமானது.முதுமலை சிங்காரா சாலையோரத்தில் நின்றிருந்த யானைக்கு, கால்நடை டாக்டர்கள் சுகுமாரன், ராஜேஷ் குமார் மயக்க ஊசி செலுத்தினர். கும்கி யானைகள் உதவியுடன் துாக்கி நிறுத்தி, லாரியில் ஏற்றப்பட்டது. தெப்பக்காடு கொண்டு செல்லும் வழியில், லாரியிலேயே யானை உயிரிழந்தது.முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,''தெப்பக்காடு யானைகள் முகாமில் சிகிச்சை அளிப்பதற்காக, மயக்க ஊசி செலுத்தி பிடித்தோம். ஆனால், வழியில் யானை உயிரிழந்தது. உடல் கூராய்வுசெய்யப்படும். சமூக விரோதிகளால், யானைக்கு தீ காயம் ஏற்பட்டது, விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.