உடுமலை;உடுமலை பகுதிகளில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் பலத்த மழையால் சேதமடைந்த நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.உடுமலை வட்டாரத்தில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில், கல்லாபுரம் சுற்றுப்பகுதியில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நெற்பயிர்கள் வளர்ந்து, கதிர் பிடித்து, அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், பருவம் தவறி குளிர் காலத்தில், 21 நாட்கள் பெய்த தொடர் மழை காரணமாக, நெற் பயிர்கள் நீரில் மூழ்கியது. வயல்களில் கவிழ்ந்து, மீண்டும் முளைக்கத்துவங்கியது. ஏக்கருக்கு, 35 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து, சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் முழுவதும் வீணாகியதால், விவசாயிகள் வேதனையடைந்தனர்.இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில், திருப்பூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் மனோகர், துணை இயக்குனர் வடிவேல், உதவி இயக்குனர் தேவி, வேளாண் அலுவலர் அமல்ராஜ், வி.ஏ.ஓ., மயில்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.பாதிக்கப்பட்ட விவசாயிகள் பட்டியல், பயிர் பாதிப்பு, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்கள் பெறப்பட்டு வருகின்றன. வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:பருவம் தவறி பெய்த கன மழையால், நெற் பயிர்கள் பாதித்துள்ளன. நெல் சாகுபடி பாதிப்பு, விவசாயிகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு, இழப்பீட்டு தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் வகையில், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. பேரிடர் கால நிவாரண நிதி வாயிலாக, உரிய இழப்பீடு பெற்று தரப்படும். 160 விவசாயிகள் வரை, பட்டியல் தயாராகியுள்ளது. தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.ஏற்கெனவே, டிச., மாதத்தில், புரெவி புயல் காரணமாக, பாதிக்கப்பட்ட, 25 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.