பொள்ளாச்சி;பலத்த தொடர் மழையால், பனப்பட்டியில் அமைந்த, துார்வாரப்படாத பழமையான தடுப்பணை, மூன்றாண்டுகளுக்குபின் மீண்டும் நிரம்பியது.பொள்ளாச்சி தொகுதியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது பனப்பட்டி கிராமம். இப்பகுதியில் மழை நீரை தேக்கி வைக்க, 40 ஆண்டுகளுக்கு முன், ஓடையின் குறுக்கே பெரிய தடுப்பணை அமைக்கப்பட்டது.கிராமத்தில், கடந்த பல ஆண்டுகளாக, குடிநீர் பற்றாக்கறை நீடித்து வந்தது. சமீபத்தில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டது. இருப்பினும், இங்குள்ள தடுப்பணை வறட்சியாக, குடிமராமத்து பணியின் கீழ், துார்வாரப்படாமல், முட்புதர்கள் நிறைந்து காணப்பட்டது.சில நாட்களுக்கு முன் வரை பெய்த தொடர் கன மழையால், போகம்பட்டி பகுதியில் இருந்த வந்த அதிகப்படியான நீரால், தடுப்பணை நிரம்பியுள்ளது. சிறிதளவு வழியும் நீரானது அருகில் உள்ள தடுப்பணையை நிரப்பி வருகிறது.இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், 'குடிநீர் பற்றாக்குறை நிறைந்த கிராமத்தில், அமைந்துள்ள தடுப்பணை துார்வாரப்படாத நிலையில், மழை நீரால் நிரம்பியுள்ளது. இருப்பினும், துார்வாரியிருந்தால் கூடுதல் நீர் தேங்கி, சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கும். அடுத்து வரும் காலங்களில், தடுப்பணையை துார்வாரி, நீரை தேக்கினால், விவசாயம் செழிக்கும், குடிநீர் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்,' என்றனர்.