மதுரை : தக்காளி செடிகளில் வெள்ளை ஈக்கள் மூலம் இலைசுருட்டு நச்சுயிரி நோய் பரவி மகசூல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வருமுன் காப்பதுடன் வந்தபின் காப்பதன் மூலம் இழப்பை தவிர்க்கலாம் என்கிறார் மதுரை வேளாண் அறிவியல் மைய உதவி பேராசிரியர் கிருஷ்ணகுமார்.அவர் கூறியதாவது: புதிதாக வளரும் தக்காளி செடிகளின் இலைகள் நோயின் பாதிப்பால் மஞ்சளாகி சுருண்டு செடிகளின் வளர்ச்சியும் குறைந்து விடும். இலைகள் அளவில் குறைந்து சுருங்கி நரம்புகள் மஞ்சள் நிறமாகி மேல்நோக்கி சுருண்டு கிண்ணம் போலிருக்கும். பூக்கள் தோன்றிதாலும் காய் பிடிப்பதற்குள் உதிர்ந்து விடும். வெள்ளை ஈக்களை கண்காணிக்க மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைக்க வேண்டும்.
தக்காளி விதைப்பதற்கு முன் விளை நிலங்களை சுற்றி வரப்பு பயிர்களாக சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்றவற்றை விதைக்கலாம். களைகளை அகற்ற வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மில்லி இமிடாகுளோரைடு அல்லது டைமெதோவேட் கலந்து நடவு முடிந்த 15, 25, 45 வது நாட்களில் தெளித்து நோயை கட்டுப்படுத்தலாம் என்றார்.