மதுரை : 'அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் லஞ்சம், ஊழலில் ஈடுபட்டால் துாக்குத் தண்டனை விதிக்க சட்டத் திருத்தம் மேற்கொள்ள தாக்கலான வழக்கில்,'சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த அமைப்பு மற்றும் அரசியல் கட்சி களிடம் மனு அளித்து நிவாரணம் தேடலாம்,' என உத்தரவிட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பைசல் செய்தது.
திருச்சி லால்குடி கீழரசூர் பார்த்திபன் தாக்கல் செய்த பொதுநல மனு: இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை முழுமையாக செலவிட்டிருந்தால், நாடு முன்னேறியிருக்கும். மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களையும் ஊழலில் பங்கெடுக்க வைத்து விட்டனர். இது பயங்கரவாதத்தைவிட ஆபத்தானது. சிந்திக்க வேண்டிய தருணம் இது.அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர், அரசியல்வாதிகள் கடமையை நிறைவேற்ற, மீறுவதற்கு லஞ்சம் பெறுகின்றனர்.
அரசுத்துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்ற நிலை உள்ளது. ஊழல்வாதிகளால் நாடு வளர்ச்சியடையவில்லை. ஊழலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. கடும் சட்டத் திருத்தம் மூலமே ஊழலை ஒழித்து, கட்டுப்பாடான சமுதாயத்தை உருவாக்க முடியும். அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், எம்.பி.,மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் லஞ்சம், ஊழலில் ஈடுபட்டால் அதிகபட்சம் ஆயுள் தண்டனை, துாக்குத் தண்டனை விதிக்கும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
தண்டனை பெற்றால் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பார்த்திபன் குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு: இம்மனு ஏற்புடையதல்ல. சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளிடம் மனு அளித்து நிவாரணம் தேடலாம். மனுவை பைசல் செய்கிறோம் என்றனர்.